சனி, 3 செப்டம்பர், 2011

ஜீ.வி- கசாரே எதிர்ப்பு-அருந்ததிராயின் பேட்டிக்கு கண்டனம்!


அண்ணா கசாரே போராட்டம்..ஒலிக்கும் அருந்ததிராயின் எதிர்ப்புக்குரல்-ஜீ,வி யில் வெளியான அருந்ததிராயின் பேட்டிக்கு..விகடன் இணையதளத்தின் விவாதக்களத்தில் நான் பதிவு செய்த கருத்துரை:-

அண்ணா கசாரே!கிரண்பேடி,பிரசாந்த் பூசன்,இவர்கள் மூவருமே மூன்று விதமான வேறுபட்ட துறைகளிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்தவர்கள்.

அருந்ததிராய் அவர்களை பொருத்தவரை சுற்றுச்சூழல் எதிர்ப்பு என்பதில் அக்கரை கொண்டவர்.அதில் தீவிரக் கவனம் செலுத்தி தொடர்ந்து போராடிவருபவர்.எம்மைப் போன்றவர்களுக்கு பத்திரிக்கை அளவில் தெரிந்து கொண்ட செய்தி இது!

2003 காலகட்டத்தில் கேரளா அரசு முக்காலியில் பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டி அந்தத் தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிருவனத்திற்கு விற்பனை செய்யும் முயற்ச்சியை எமது இயக்கம் உள்பட, விவசாய அமைப்புகள் தடுத்து நிறுத்தி தொடர்ந்து போராடி வந்தன.அப்பொழுது எமது இயக்கத்தின் சார்பில் அருந்ததிராய் அவர்களை அழைத்து முக்காலியில் அணைகட்டும் கேரளா அரசுக்கு எதிராக போராட முனைந்தோம்!

நான் அறிந்த வகையில் இந்திய அளவில் மக்கள் பிரச்சனைகளுக்காக பொதுநல நோக்கில் துணிவுடன் போராடக்கூடிய வீரப்பெண்மணி அருந்ததிராய் என்று சொன்னால் அது மிகையாகது.

அதுபோல அண்ணா காசாரே இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று விவேகானந்தர்,காந்திஜியின் கொள்கைகளால் கவரப்பட்டு திருமணம் செய்து கொள்ளாத பிரமச்சாரியாக,குடில் போன்ற வீட்டில் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்.

மழை வளம் இருந்தும் தமது சித்திக் கிராமம்- சரியான மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாமல்-தரிசு நிலமாக இருந்தது.அந்தப்பகுதியில் வசித்த மக்கள் வருமையின் பிடியில் சிக்குண்டு வாழ வழியின்றி நகரத்தை நோக்கி புலம் பெயர்ந்தனர்.இதைக்கண்ட கசாரே இதற்கு மாற்று வழியாக பத்துக்கும் மேற்பட்ட சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று-இன்று செழிப்புடன் பொன்விளையும் பூமியாக மாற்றிக்காட்டியவர்.கசாரேவின் சமூகப்போராட்டம் சித்திக் கிராமத்திலிருந்து  ஆரம்பித்தது.அன்று இந்தச்செய்தி யாருக்கும் தெரிந்திருக்கவில்லையே!எந்த மீடியாவும் அந்தபகுதியை தாண்டி பிரபலப்படுத்த வில்லையே!

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலுக்கு எதிராக முனைப்புக்காட்டி, போராடி பல்வேறு சூழல்களை தாண்டி ஆகஸ்ட் 16 போராட்டம் ஊழலலுக்கு எதிரான மக்கள் புரட்சியை தட்டி எழுப்பியது.

மேலும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடியின் காவல்துறை அதிரடிகள்-திரைப்படமாகவே எடுக்கப்பட்டது நாடறிந்த உண்மை.உச்சநீதிமன்றத்தின் மூத்த சட்டப்போராளிகள் பூசன் சகோதரர்கள் சாதாரனமாணவர்கள் அல்ல!கசாரேவுடன் இவர்கள் இணைந்து போராடியது!மேலும் மக்கள் புரட்சியை தட்டி எழுப்பியது!

வெகுசன மக்கள் படை தான் சனநாயகமாக மிளிருகிறது.இதுதான் உண்மை!இதுதான் எதார்த்தம்!கசாரேவின் ஆகஸ்ட் 16 போராட்டத்தை வெகுசன ஊடகத்துறை புறந்தள்ளி இருந்தால்!மக்கள் அத்தகைய ஊடகத்துறையை கண்டுகொள்ள மாட்டார்கள்!ஊடகத்துறையினர் சாதாரணமாக யாருக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட மாட்டார்கள்.

நமது அண்ணா அவர்களின் திரவிட-தமிழ்நாடு போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் வெகுசன ஊடகத்துறை இருட்டடிப்பு செய்தன!பிறகு அவர் மக்கள் சக்திமிக்க தலைவராக வளரும் பொழுது அவரது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே கருத்துரையில் முன்னோடிகள் கூறியது போல் ஊழல் என்பது ஒரு பகுதி சார்ந்த பிரச்சனை அல்ல! ஒட்டுமொத்த இந்தியர்களின் அன்றாட வாழ்வில் நடைபெறும் மிகக்கொடிய சமூக அநீதி!ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதும்!அதற்கு கசாரேவின் போராட்ட வடிவம் சரியான தொடக்கம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்!

இந்த நேரத்தில் ஒரு பகுதி சார்ந்த போராட்ட களத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்க வில்லை!என்று குறை கூறும் அருந்ததிராயின் கருத்து ஏற்புடையது அல்ல!கண்டனத்திற்குரியதே!

நல்ல செய்தி ஒன்று மிளிரும்பொழுது அதற்கு மதம் சார்ந்தது என்று புலம்புவது அபத்தமானது.ஈழத்தில் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்களே நம் உடன் பிறப்புக்கள் அதற்கு ஏன் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வில்லை? இந்தக் கேள்வி ஏன் அருந்ததிராயிடம் இருந்து வரவில்லை.அவர் முன்னெடுத்துச் சென்ற போராட்ட வடிவத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தான் அவரை ஆத்திரப்பட வைத்துள்ளது.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

கல்லூரிப்பருவம்-கண்மூடிய பாலுணர்ச்சி!

கொங்குதமிழகத்தின் மிகப்பெரிய பொறியியல் கல்லூரி ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம்.இதைக்கேட்டதும் எமக்கும்,எம்மோடு கேட்டவர்களுக்கும் மிகப்பெரிய காமெடிகாட்சியை பார்த்தது போன்று விழுந்து,விழுந்து சிரித்தோம்.ஆனால் ஒரு புறம் அந்தக் காட்சி எமது மனதை பிசைந்தது.சிறுகதையை போன்று இருந்தாலும்..சிந்திக்க வேண்டிய செய்தி...

சம்பவத்திற்கு வருவோம்....எமது நெருங்கிய உறவுக்கார மாணவன் அந்த பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிறான்.அவன் கடந்த வாரம்-கல்லூரியில் சேர்ந்த முதல் வார விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான்.அப்பொழுது அந்த மாணவனிடம் நானும்,அவனது குடும்பத்தினர்களும் கல்லூரியைப் பற்றியும்,அவனுடன் கல்வி பயிலும் சக மணவர்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தோம்.அப்பொழுது அவன் கூறிய சம்பவத்தை இங்கே தருகிறேன்.

அவனது விடுதி அறையில் அந்த மாணவனோடு சேர்ந்து மூன்று பேர் இருக்கிறார்கள்.அதில் ஒரு மாணவன் கொஞ்சம் கலராக, அழகாக இருப்பானாம்.அந்த மாணவனின் அலைபேசிக்கு தொடர்ந்து இரு தினங்களாக ஒரே எண்ணிலிருந்து இடைவிடாமல் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.அதுவும் அந்த அலைபேசி எண் மற்றும் அதை அனுப்பும் நபர் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு யாரென்றே தெரியாது.

ஐ.லவ் யூ..ஐ.லவ்.யூ...இதுதான் எஸ்.எம்.எஸ் வரிகள்.இந்த எஸ்.எம்.எஸ் வரத்தொடங்கிய இரண்டு தினங்களிலேயே அந்த மாணவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.ஆனால் அவன் இது பற்றி சக மாணவர்கள் யாரிடமும் கூறவில்லை.

அன்று மாலை கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு திரும்பியதும் மீண்டும் எஸ்.எம்.எஸ் படலம்...அதிர்ச்சி அடைந்த அவன் எதிர் முனைக்கு அதாவது எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்டு "நீங்கள் யார்? எதற்காக எனக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளான்.

அதற்கு எதிர் முனையில் வந்த பதில் "நான் சி எஸ் டிபார்ட்மெண்டில் பஸ்ட் இயர் படிக்கிறேன்..எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம்..பேசத்தெரியாது...நான்..
ஓப்பன் டைப்...எதா இருந்தாலும்..ஓப்பனா சொல்லிருவேன்...உன்னை நான் இரண்டு நாள பார்த்திட்டிருக்கேன்...ஐ.லவ்.யூ..உன்னை நான் லவ் பண்றேன்..சின்சியரா லவ் பண்றேன்"...இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன் பேசிக்கொண்டிருந்த அலை பேசியை தூக்கி எறிந்து விடுகிறான்.

இதைப்பார்த்த எமது உறவுக்கார மாணவன் மற்றும் உடன் இருந்த மற்றொரு மாணவனும் தூக்கி எறியப்பட்ட அலைபேசியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து.."என்னடா நடந்தது..ஏன்டா போனை தூக்கி எரிஞ்சே"..என்று கேட்டுள்ளார்கள்.

 ஆனால் அந்த மாணவன் தனது அலைபேசியிலிருந்து தனது அம்மாவை தொடர்பு கொண்டு "அம்மா என்னை ஒரு பொண்ணு லவ் பண்றேன் சொல்லுதம்மா...நான் என்ன பண்ணட்டும்மா..என்று அப்பாவியாக கேட்டுள்ளான்.அதிர்ச்சியடைந்த அவர்கள் "சாமி அதெல்லாம் நமக்கு வேண்டான்டா...அதுகிட்ட கூப்பிட்டு வேண்டாம்னு..சொல்லிர்ர சாமி..வம்பு..தும்புக்கெல்லாம் போய்ராதட சாமி..பத்திரம பார்த்து படிச்சு நல்ல பேர் எடடா சாமி"என்று அறிவுருத்தியுள்ளார்கள்.

அதன் பிறகு தனது அறைத் தோழர்களிடம் நடந்ததை கூறியுள்ளான்.
நண்பர்களும் அவன் அம்மா கூறியதை ஆமோதித்து... ஐ.லவ்.யூ மாணவியை தொடர்பு கொள்ளச் செய்து..தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்து அந்த உறவுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளான்.

இது ஒரு புறம் காமெடியாக இருந்தாலும்..மறுபுறம் நம்முடைய இளம் நாயகர்களின் திரைப்படங்கள் சின்ன சிறார்கள் மனதில் எந்த அளவுக்கு மோசமான ஆலகால விசத்தை தூவி..கல்வி கற்க வேண்டிய வயதில் காதல் டூயட் எனும் புதை குழியில் தள்ளப்பட்டுள்ளதை என்னும்பொழுது வேதனை தான் மிஞ்சுகிறது. .

இது போன்ற சம்பவங்கள் நாளை நமது குடும்பத்திற்கும் வரலாம்.தமிழில் ஆபாச பதிவுகளை வெளியிடும் நண்பர்களே! எழுத்தாளர்களே! நாயகர்களே!இயக்குனர்களே! தயவுசெய்து உங்களை சுய ஆய்வுவிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.சிறுவர்களையும்,மாணவர்களையும், இளைஞர்களையும் உமது வியாபாரத்திற்காக! தயவுசெய்து சீரழிக்காதீர்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 31 ஆகஸ்ட், 2011

தீரன்சின்னமலையின்-விநாயகர் சதுர்த்தி!

ஒரு சமயம் பார்வதிதேவியார் குளக்கரையில் குளிக்க செல்லும் பொழுது வெளியில் காவல் காக்க யாரும் இல்லை.அதனால் அங்கிருந்த சந்தனக் குழம்பை எடுத்து உருவம் ஒன்றை அமைத்து அதற்கு உயிர்கொடுத்து நான் குளித்துவிட்டு வரும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று பணித்து விட்டு குளிக்கச் செல்கிறார். பார்வதியால் உயிர் கொடுக்கப்பட்டதால் அது பிள்ளையாகி விட்டது.

அந்தச்சமயம் பார்த்து தமது மனைவியை பார்க்க வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுக்கிறார்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை கொய்துவிட்டு உள்ளே செல்கிறார்.
நீராடிவிட்டு வெளியில் வந்த பார்வதியார்,சிரச்சேதம் செய்யப்பட்ட பிள்ளையாரைக் கண்டு கோபம் கொள்கிறார்.தான் உருவாக்கிய பிள்ளயாரை சிவனே சிரச்சேதம் செய்ததை அறிந்து ஆத்திரம் கொண்ட பார்வதியார் காளியாக உருமாறி மூவுலகிலும் தமது கண்ணில் கண்டதை எல்லாம் அழித்து ஒழிக்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட தேவர் கூட்டம் சிவனை சந்தித்து முறையிடுகிறார்கள்.பார்வதியாரை சாந்தப்படுத்த வேண்டி தனது பரிவாரங்களை வடதிசையில் அனுப்பி முதலில் தென்படும் ஜீவராசியின் தலையை கொய்து வருமாறு உத்தரவு இடுகிறார்.வடதிசை நோக்கி சென்ற பரிவாரங்களின் பார்வையில் முதலில் தென்படும் யானையின் தலையை கொய்து வந்து சிவனிடம் தருகிறார்கள்.

அந்தத்தலையை பார்வதியால் உருவாக்கி, தன்னால் வெட்டுண்டு கிடக்கும் பிள்ளையின் முண்டத்தின் மீது பொருத்தி உயிர்கொடுக்கிறார் சிவபெருமான்.அந்தப்பிள்ளைக்கு கணேசன் என்று பெயர் சூட்டி தனது கணங்களுக்கு கணபதியாக நியமித்துக் கொள்கிறார்.இதனால் சாந்தம் அடைந்த பார்வதியார் கணபதியை அணைத்துக் கொண்டு மனம் குளிர்கிறார்.

இந்த நிகழ்வு ஆவணி சுக்கில பட்ச சதுர்த்தி அன்று நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன! விநாயகர் அவதரித்த இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1790 காலகட்டத்தில், கொங்குநாட்டில்! மைசூர் மன்னன் திப்புசுல்தானின் வரிவசூலை பறித்துக்கொண்டு "சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை எடுத்துக் கொண்டான் என உமது மன்னனிடம் போய்ச்சொல்' என்று முழங்கிய இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலையும்-கன்னடத்து போர்வாள் திப்புசுல்தானும் எதிரும்-புதிருமாக மோதிக்கொண்டு வீழ்வதைவிட-நமது தாய் திருநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டி அடிக்க- இருவரும் இணைந்து போராட வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து-வெள்ளையர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார்கள்.

சின்னமலை தாம் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஒரு வீரவிநாயகர் சிலையை நிருவினார்.தீரன்சின்னமலையின் இந்த வெற்றிவிழா ஒவ்வொரு முறையும் ஒரு விநாயகர் சதுர்த்தியாகவே கொண்டாடப்பட்டது.மாவீரனால் நிருவப்பட்ட விநாயகர் சிலைகள் பலவும் துரோகிகளால் அழித்து ஒழிக்கப்பட்டது.

இருப்பினும் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி மேடையில் சுமார் 12 அடி உயரத்தில் வீரவிநாயகர் சிலை உள்ளது.

வீரவிநாயகர் சிலையை நிருவிய மாவீரன் தீரன்சின்னமலையின் பெயர் சொல்லும் படி இன்றும் வழிபடும் பக்தர்களுக்கு தம் திருவருளை வீர அருளாக தந்து கொண்டிருக்கிறார்.இப்பொழுதும் முதன் முதலாக இந்திருத்தளத்திற்கு
வருகை தரும் பக்தர்களுக்கு அவர்கள் மனதில் ஒரு எழுச்சியினையும்,
ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்தும் விதமாக வீரவிநாயகர் காட்சி தருகிறார்.

1893-ல் லோகமான்ய பாலகங்காதர திலகர் வெள்ளயர்களுக்கு எதிராக தேசியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்தெடுக்கும் பொருட்டு விநாயகர்சதுர்த்தி விழாவை வடமாநிலங்களில் பிரபலப்படுத்தினார் என்று இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அதற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொங்குநாட்டின் விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை வீரவிநாயகர் சிலை நிருவி வாழிபாடு நடத்தி விடுதலைப்போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீரன்சின்னமலை-திப்புசுல்தான் இருவரின் விடுதலைப்போராட்ட வரலாறு! இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் சரித்திரச்சான்றுகளாக இருந்து வருகிறது என்பதை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

இந்தியப்பேரரசே! உயிர்காக்க வழிவிடுங்கள்!

  தமிழ் இணைய தளப்பதிவர்களே!சமூக அமைப்புகளே! நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் ஓரே அணியாக ஒன்று திரண்டு மூவரின் உயிர்காக்கும் போராட்டத்தை முன் எடுத்துச்சென்று முனைப்புடன் செயல்படுவோம்!

இந்தியப் பேரரசே! பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரும்,அவர்கள் குடும்பத்தினர்களும் என்ன பாவம் செய்தார்கள்? இருபது ஆண்டுகளாக சிறைச்சாலை என்னும் புதைகுழியில் தள்ளி கொல்லாமல் கொடுமைப்படுத்தினீர்கள்.இருபது ஆண்டுகள் கடந்தும் இன்னும மனம் மாறவில்லை? கொலை வெறியின் தாகம் தீரவில்லை?

கொத்துக் கொத்தாக ஈழத்தமிழர்களை கொன்று குவித்தும் இன்னுமா உங்கள் கொடூரம் குறையவில்லை? நமது தேசத்தின் சனாதிபதி அவர்களே!  நிரபராதிகளை கொலை செய்ய வேண்டும் என்ற கொடுமை இன்னுமா தொடரவேண்டும்? எதற்காக இந்த கொலை வெறி?

1.75 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து இந்த நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்த கொடியவர்களை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரப் பயப்படும் நீங்கள் ஏன் மூன்று தமிழர்களையும் விட்டு வைக்க மறுக்கிறீர்கள்?

அதிலும் பல தரத்தில் நடைபெற்ற புலனாய்வுகள் அனைத்தும் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லியும் கூட ஏன் இன்னும் விடுதலை செய்வதை விடுத்து தூக்கில் தொங்கவிடத் துடிக்கிறீர்கள்?

அய்யோ! அவர்களுக்கு எமது தாய் திருநாட்டில் கூட உயிர் பிச்சை ஏந்தவேண்டிய அவலத்திற்கு தள்ளி விட்டீர்களே! அவர்கள் அந்நியர்கள் அல்ல! கொள்ளையர்களும் அல்ல! கொலைகாரர்களும் அல்ல! விடுதலை செய்யுங்கள்! தயவுசெய்து காப்பாற்றுங்கள்..அத்தகைய விடுதலைக்கு உலகத் தமிழர்களிடம் என்ன கையூட்டு எதிர்பார்கிறீர்கள்? சொல்லுங்கள் இந்தியப் பேரரசே?

மீண்டும் சொல்கிறேன்!தமிழ் இணைய தளப்பதிவர்களே!சமூக அமைப்புகளே!நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் ஓரே அணியாக ஒன்று திரண்டு மூவரின் உயிர்காக்கும் போராட்டத்தை முன் எடுத்துச்சென்று முனைப்புடன் செயல்படுவோம்!
   
தேதி:29-8-11                                                             இவன்:-டி.கே.தீரன்சாமி
                                                                                         மாநில அமைப்பாளர்                                                                  
                                                                                         கொங்குதமிழர்கட்சி
                                                                        தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசாறை

best links in tamil
More than a Blog Aggregator

ஆசியாவின் TOP 50 பல்கலைக்கழகங்கள்!

 QS www.topuniversities.com என்ற இணையதளம் ஆசிய அளவிலான மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 50 இடத்தில்இந்தியாவின் 5 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளது.

அந்த ஐந்து நிறுவனங்களும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப ஐ.ஐ.டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் முதல் பத்து இடங்களில் நமது இந்திய நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பதை பார்க்கும் பொழுது நமக்கு வேதனைதான் மிஞ்சுகிறது.அதிலும் நமது ஐ.ஐ.டிகள் 36,37,38,43,48 என்று மிகவும் கீழ்நிலையில் பின்தங்கிஉள்ளது.

அடுத்து 50லிருந்து 100க்குள் மூன்று கல்வி நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது மேலும் இந்தப்பட்டியலில் விளம்பரங்களில் பெருமை பேசிக்கொள்ளும் தனியார் மற்றும் மருத்துவ விஞ்ஞான கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.ஆறுதலாக தமிழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னை (IITM) 43 வது இடத்தை பிடித்துள்ளது.ஆனால் அண்டை நாடுகளான சீனா,ஜப்பான்,கொரியாவின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

ரூ 65 கோடியில் முந்த்ரா ஊழலில் ஆரம்பித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக ஊழலின் கோரவிருட்சம் வளர்ந்துள்ளது.கோடி,கோடியாக கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கல்வியின் தரத்தை உயர்த்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அண்ணா கசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.அதுபோல கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகள் கலையப்பட வேண்டும். அதற்கு நாடு தழுவிய அளவில் மாணவர்களின் புரட்சி வெடிக்கவேண்டும்.

பட்டியலில் இடம்பெற்ற முதல் பத்து பல்கலைக்கழகங்கள்:-

1 ஹாங்காங்க் அறிவியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஹாங்க் காங்க்
2 ஹாங்காங்க் பல்கலைக்கழகம்-ஹாங்கங்க்
3 சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம்-சிங்கப்பூர்
4 டோக்கியோ பல்கலைக்கழகம்-டோக்கியோ
5 ஹாங்காங்க் சைனீஸ் பல்கலைக்கழகம்-ஹாங்காங்க்
6 சியோல் தேசியப்பல்கலைக்கழகம்-தென்கொரியா
7 கியோட்டோ பல்கலைக்கழகம்-ஜப்பான்
8 ஓசாக பல்கலைக்கழகம்-ஜப்பான்
9 டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜப்பான்
9= டொகோகூ பல்கலைக்கழகம்-"ஜப்பான்
10 கொரியா தொழிநுட்பபல்கலைக்கழகம்-தென்கொரியா 
best links in tamil
More than a Blog Aggregator