விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஆகஸ்ட், 2011

தீரன்சின்னமலையின்-விநாயகர் சதுர்த்தி!

ஒரு சமயம் பார்வதிதேவியார் குளக்கரையில் குளிக்க செல்லும் பொழுது வெளியில் காவல் காக்க யாரும் இல்லை.அதனால் அங்கிருந்த சந்தனக் குழம்பை எடுத்து உருவம் ஒன்றை அமைத்து அதற்கு உயிர்கொடுத்து நான் குளித்துவிட்டு வரும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று பணித்து விட்டு குளிக்கச் செல்கிறார். பார்வதியால் உயிர் கொடுக்கப்பட்டதால் அது பிள்ளையாகி விட்டது.

அந்தச்சமயம் பார்த்து தமது மனைவியை பார்க்க வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுக்கிறார்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை கொய்துவிட்டு உள்ளே செல்கிறார்.
நீராடிவிட்டு வெளியில் வந்த பார்வதியார்,சிரச்சேதம் செய்யப்பட்ட பிள்ளையாரைக் கண்டு கோபம் கொள்கிறார்.தான் உருவாக்கிய பிள்ளயாரை சிவனே சிரச்சேதம் செய்ததை அறிந்து ஆத்திரம் கொண்ட பார்வதியார் காளியாக உருமாறி மூவுலகிலும் தமது கண்ணில் கண்டதை எல்லாம் அழித்து ஒழிக்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட தேவர் கூட்டம் சிவனை சந்தித்து முறையிடுகிறார்கள்.பார்வதியாரை சாந்தப்படுத்த வேண்டி தனது பரிவாரங்களை வடதிசையில் அனுப்பி முதலில் தென்படும் ஜீவராசியின் தலையை கொய்து வருமாறு உத்தரவு இடுகிறார்.வடதிசை நோக்கி சென்ற பரிவாரங்களின் பார்வையில் முதலில் தென்படும் யானையின் தலையை கொய்து வந்து சிவனிடம் தருகிறார்கள்.

அந்தத்தலையை பார்வதியால் உருவாக்கி, தன்னால் வெட்டுண்டு கிடக்கும் பிள்ளையின் முண்டத்தின் மீது பொருத்தி உயிர்கொடுக்கிறார் சிவபெருமான்.அந்தப்பிள்ளைக்கு கணேசன் என்று பெயர் சூட்டி தனது கணங்களுக்கு கணபதியாக நியமித்துக் கொள்கிறார்.இதனால் சாந்தம் அடைந்த பார்வதியார் கணபதியை அணைத்துக் கொண்டு மனம் குளிர்கிறார்.

இந்த நிகழ்வு ஆவணி சுக்கில பட்ச சதுர்த்தி அன்று நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன! விநாயகர் அவதரித்த இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1790 காலகட்டத்தில், கொங்குநாட்டில்! மைசூர் மன்னன் திப்புசுல்தானின் வரிவசூலை பறித்துக்கொண்டு "சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை எடுத்துக் கொண்டான் என உமது மன்னனிடம் போய்ச்சொல்' என்று முழங்கிய இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலையும்-கன்னடத்து போர்வாள் திப்புசுல்தானும் எதிரும்-புதிருமாக மோதிக்கொண்டு வீழ்வதைவிட-நமது தாய் திருநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டி அடிக்க- இருவரும் இணைந்து போராட வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து-வெள்ளையர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார்கள்.

சின்னமலை தாம் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஒரு வீரவிநாயகர் சிலையை நிருவினார்.தீரன்சின்னமலையின் இந்த வெற்றிவிழா ஒவ்வொரு முறையும் ஒரு விநாயகர் சதுர்த்தியாகவே கொண்டாடப்பட்டது.மாவீரனால் நிருவப்பட்ட விநாயகர் சிலைகள் பலவும் துரோகிகளால் அழித்து ஒழிக்கப்பட்டது.

இருப்பினும் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி மேடையில் சுமார் 12 அடி உயரத்தில் வீரவிநாயகர் சிலை உள்ளது.

வீரவிநாயகர் சிலையை நிருவிய மாவீரன் தீரன்சின்னமலையின் பெயர் சொல்லும் படி இன்றும் வழிபடும் பக்தர்களுக்கு தம் திருவருளை வீர அருளாக தந்து கொண்டிருக்கிறார்.இப்பொழுதும் முதன் முதலாக இந்திருத்தளத்திற்கு
வருகை தரும் பக்தர்களுக்கு அவர்கள் மனதில் ஒரு எழுச்சியினையும்,
ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்தும் விதமாக வீரவிநாயகர் காட்சி தருகிறார்.

1893-ல் லோகமான்ய பாலகங்காதர திலகர் வெள்ளயர்களுக்கு எதிராக தேசியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்தெடுக்கும் பொருட்டு விநாயகர்சதுர்த்தி விழாவை வடமாநிலங்களில் பிரபலப்படுத்தினார் என்று இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அதற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொங்குநாட்டின் விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை வீரவிநாயகர் சிலை நிருவி வாழிபாடு நடத்தி விடுதலைப்போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீரன்சின்னமலை-திப்புசுல்தான் இருவரின் விடுதலைப்போராட்ட வரலாறு! இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் சரித்திரச்சான்றுகளாக இருந்து வருகிறது என்பதை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 29 ஜனவரி, 2011

காந்தியே திரும்பிப்போ! 1947-ஆகஸ்டு-13



 ஜனவரி-30 தேசத்தந்தை காந்தியாடிகள் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கித்தோட்டாக்களுக்கு இறையான நாள்.ஊழலின் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் நமது தேசம் இன்று உத்தமர் காந்தியடிகளின் நினைவு தினத்தை சர்வோதைய தினமாக அனுசரிக்கிறது.

 பாகிஸ்தான் பிரிவினைகோரி இந்து-முஸ்லீம் கலவரம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது.1947-ல் சுதந்திரத்திற்கான முஸ்தீபுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.1947-ஆகஸ்டு-13.இருபதுக்கும் மேற்பட்ட சமஸ்தான மன்னர்கள் இந்திய டொமினியனுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

 இதே தினத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா அவமானத்தின் உச்சத்துக்கு தள்ளப்படுகிறார்.1946-ஆகஸ்டு-16 ஆம் தேதி முஸ்லீம் லீக் தொண்டர்களின் வன்முறை தாண்டவத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பழிக்கு,பழி வாங்கும் நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்கள் என்று அச்சப்பட்ட கல்கத்தாவின் சூட்பூர் சக்கரவர்த்தி காந்திஜியுடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டார்.

 அதன்படி ஆகஸ்டு-13ல் கல்கத்தா பாலிகட்டா சாலையில் அமைந்துள்ள ஹைதரி மாளிகைக்கு சுஹ்ரவர்த்தி காந்தியடிகளை வரவழைக்கிறார்.காந்தியடிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களை சமதானப்படுத்தவே அங்கு வருகிறார்.காந்தியடிகள்,அவரது உதவியாளர்களுடன் ஹைதரி மாளிகைக்கு காரில் வருகிறார்.

 எந்த மக்களின் மனதை மாற்ற வேண்டும் என காந்தியடிகள் வந்திருந்தாரோ!அந்த மக்கள் அனைவரும் ஹைதரி மாளிகையின் முன்பு கூடியிருந்தார்கள்.அவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் வன்முறையாளர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்.

 காந்திஜி காரில் இருந்து இறங்கியதும் அவருக்கு எதிராக எரிமலையாக பொங்கி எழுந்தார்கள்."காந்தியே திரும்பிப்போ!நவகாளிக்குப் போய் இந்துக்களை காப்பாற்று!முஸ்லீம்களை காப்பாற்ற இங்கு வராதே!இந்துதுரோகியே!"என்றெல்லாம் முழங்கினார்கள்.

 "மாகாத்மா" "தேசத்தந்தை" "உத்தமர்"என்று உலக மக்களால் போற்றப்பட்ட காந்தியடிகளை எதிர்த்து அந்த மக்கள் ஆக்ரோசக் குரல் எழுப்பினார்கள்.அவர்மீது மண்ணைவாரி தூற்றி சாபம் இட்டார்கள்.கற்களையும்,பாட்டில்களையும் கொண்டு அண்ணலின் காரை அடித்து நொருக்கினார்கள்.

 அந்த மக்களின் போராட்டம் காரணமாக காந்திஜி தனது மாலை பிராத்தனையைக்கூட கைவிட நேர்ந்தது.கடும் சீற்றத்துடன் பொங்கிய மக்களின் எதிர்ப்பைக் கண்டு துளியும் அஞ்சாமல் அவர்களை நோக்கிச் சென்று 
"என்னைத்தாக்க விரும்பினால் நானே உங்களிடம் வருகிறேன்.எனக்கு இந்துக்களும்,முஸ்லீம்களும் ஒன்றுதான்.என்னையே நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.வாழ்க்கையின் இருதி கட்டத்தில் நிற்கும் நான் இருக்கப்போவது இன்னமும் கொஞ்ச நாள்தான்.என்னைக் கொல்வதானால் யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை"
என்று தேசத்தந்தைக் கூறினார்.

  அவரது பேச்சையும்,செயலையும் கண்டு அங்கு கோபத்துடன் குழுமி இருந்த கூட்டத்தினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.அத்தகைய உத்தமரை 1948-ஜனவரி-30ம்தேதி இதே தினத்தில் நாதுராம் கோட்சே காந்தியை பணிந்து வணங்கி மரியாதை செலுத்திய பிறகுதான் தனது கைத்துப்பாக்கியால் தேசப்பிதாவை சுட்டுக்கொலை செய்தார்.

 தனது வாழ்வையும்,மரணத்தையும் நாட்டின் விடுதலைக்காக அர்பணித்தார்.

 ஆனால் காந்தியடிகள் கண்ட சுதந்திர இந்தியா இன்று ஆண்டிமுத்துராசாவின் தலைமையில் 1.76 லட்சம் கோடிரூபாய் ஊழலின் ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது. உழல்களின் சர்வதேசத் தலைநகரமாக உயர்ந்துள்ளது. 

                                படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்.
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்



 மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.

 மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார்.

 சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.

 அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார்.

 காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?  

 1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சியின் போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.

 அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக்  கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றது.

 அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்து,உதைத்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினார்கள்.


 "இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.

 மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை.

   சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை பழிதீர்க்கும் வகையில் போராளிக் குழுக்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டினார்கள்.அவர்கள் திட்டப்படி மீனாட்சிஅம்மனை தரிசிக்க வந்த அய்யர் தீச்சட்டியை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.

            தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,
செய்தி ஊடகப்பதிவுக்காக-  டி.கே.தீரன்சாமி

  
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 4 டிசம்பர், 2010

இந்திய விடுதலைப் புலி சின்னமலை

                  தீரன்சின்னமலையின் வரலாற்று சுருக்கம்


                                                                                                                                                                                                                                                                                              உலகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமைச்சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை ஆகும்.அத்தகைய அடிமைத்தனத்திற்கு எதிராக தனி மனிதர்களின் தலைமையில் போராளிக்குழுக்கள் தோன்றுவதும், வீழ்வதும் ஒரு கட்டத்தில் வெற்றிபெறுவதும் வரலாற்று நிகழ்வுகள்.



 நமது பாரததேசம் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். 


முதல் இந்திய சுதந்திரப்போராட்டம் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டில் இருந்து நமதுதாய்த் திருநாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்டவன் இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலை


 கொங்கு 24நாடுகளில் இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் நாட்டில் மேளப்பாளையம்-கிராமத்தில் வாழ்ந்த கொங்குவேளாளர்சாதீ- பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதிகளுக்கு 17-4-1756 அன்று இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.


தனது இளைமைப்பருவத்தில் சிலம்பாட்டம்,வில்வித்தை,கிணறு தாண்டுதல்,குதிரை ஏற்றம்,வேட்டையாடுதல் போன்ற வீரவிளையாட்டுகளில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்.கொங்குநாடு அப்பொழுது மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி திவான் மூலமாக மைசூராருக்கு சென்றது.


வடக்கே சென்னிமலை,தெற்கே சிவன்மலை,கிழக்கே அரச்சலூர் தலவுமலை இதன் மத்தியில் அடர்ந்த வனப்பகுதி.இங்கு தீரன்சின்னமலை தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வேட்டைக்கு செல்வது வழக்கம்.அப்படி ஒருநாள் வேட்டைக்கு செல்லும்பொழுது தாராபுரம் வேலாயுதக்கவுண்டரிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு சங்ககிரியை நோக்கி சென்ற இரண்டு குதிரை வீரர்களிடம் இருந்து வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்தார்.


அப்பொழுது சிவன்மலைக்கும்-சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டதாக உமது திவானிடம் போய்ச்சொல் என்று தீரன்சின்னமலை முழங்கினார்.அதன் பிறகுதான் தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் தீரன்சின்னமலையாக மாறியது. இந்த நிகழ்வை சங்கிரி திவான்-மைசூர் மன்னரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.கோபம் கொண்ட மைசூர்மன்னர் ஹைதர்அலி குதிரைப்படை ஒன்றை அனுப்பி சின்னமலையை கைது செய்து இழுத்துவர பணித்தார்.ஆனால் திவானின் குதிரைப்படையை சின்னமலையின் தடிக்காரப்படை அடித்துநொறுக்கி விரட்டி அடித்தது.


7-12-1782-இல் ஹைதர்அலியின் மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் அரசர் ஆனார்.மைசூராரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை கிழக்கிந்தியக்கம்பெனி கபலீகரம் செய்ய திப்புவிற்கு எதிராக கடும்போர் நடத்தி வந்தனர்.இத்தகைய அவசர காலத்தில் கொங்குநாட்டு வரிவசூலுக்கு எதிராக சின்னமலை வீரத்துடன் தடுத்து நிறுத்தி போரிடுவது திப்புவை வெகுவாக கவர்ந்தது.சின்னமலையிடம் சண்டையிட்டு உள்நாட்டு போரில் கவனம் செலுத்துவதைவிட-நம்மோடு இணைத்துக்கொண்டு நமது மண்ணின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டியடிக்க திப்பு விவேகமாக உறுதிபூண்டு சின்னமலைக்கு தூது அனுப்பினார்.


மண்ணின் பொது எதிரியை வீழ்த்தும் திப்புவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சின்னமலை ஆயிரம் இளைஞர்கள் கொண்ட கொங்குபடையை மைசூருக்கு அழத்துச்சென்றார்.அங்கு திப்புவின் தளபதிகள் மற்றும் பிரஞ்ச் படைவீரர்கள் கொண்டகுழு கொங்குபடைக்கு முறைப்படி போர்ப்பயிற்சி அளித்தனர். கொங்குபடை மழவல்லி,சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.குறிப்பாக மழவல்லிப் போரில் 40,000 வீரர்கள் கொண்ட வெள்ளைப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.


மாவீரன் நெப்போலியனிடம் உதவி வேண்டி திப்பு அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வை தேவர் இடம் பெற்றிருந்தர்.


4-5-1799-இல் நான்காம் மைசூர்போரில் கன்னட நாட்டின்போர்வாள் திப்பு கொல்லப்பட்டார்.திப்புவின் வாரிசுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சின்னமலையின் உற்ற நண்பன் வேலப்பன் வெள்ளையப்படையினரால் கைது செய்யப்பட்டார்.அதன் பிறகு சின்னமலை கொங்குநாடு திரும்பினார்.அரச்சலூர் ஓடாநிலையில் கோட்டை-கொத்தளங்கள் அமைத்து தம்மை கொங்குநாட்டின் பாளைக்காராக அறிவித்துக்கொண்டார்


.பிற பாளையக்கரர்களுக்கும் தூது அனுப்பி வெள்ளயர்களை விரட்டி அடிக்கவேண்டும்.அதற்கு நமது ஒற்றுமை அவசியம் என்பதை வழியுறுத்தினார்.சின்னமலையின் வெள்ளைஎதிர்ப்பு கூட்டமைப்பில் வேளாளர்,நாயக்கர்,வேட்டுவர்,ஆதிதிராவிடர்,தாழ்த்தப்பட்டோர்,தேவர்,வன்னியர்நாடார்,இஸ்லாமியர் என்று பலர் இருந்தனர்.அவர்களில் கருப்பசேர்வை,ஓமலூர் சேமைலைப்படையாட்சி,சென்னிமலைநாடார்,முட்டுக்கட்டைபெருமாத்தேவன்,பத்தே முகமதுஉசேன்,விருப்பாட்சிகோபாலநாயக்கர்,சுபேதர்வேலப்பன்,
செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


முந்தைய காலகட்டத்தில் (18-4-1792-இல்) அனுமந்தராயர் என்ற வேட்டுவக்கவுண்டரிடம் காங்கயம்-சிவன்மலை பட்டாலிகிராமத்தில் தமது பெயரில் விலைக்கு வாங்கிய இடத்தில் போர்ப்பாசறை அமைத்து ஆயுதங்கள் தாயாரித்து-வீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார்.பிரஞ்சு வீரர்களின் துணையுடன் சிறுரக பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டது.


 திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாகின் திட்டப்படி சில பாளையக்காரர்களின் துணையுடன் கோவைக்கோட்டையை தகர்த்து லெப்டினன்ட் கர்னல் க்ஸிஸ்டரின் தலைமையிலான 5-ஆம் கம்பெனியின் பட்டாளத்தை அழிக்க சின்னமலை திட்டமிட்டார்.ஒருநாள் முன்னதாகவே போராளிகள் அறிவிப்பின்றி செயல்பட்ட காரணத்தால் கோவைப்புரட்சி தோழ்வியில் முடிந்தது.


வெள்ளையர்களுக்கு எதிரான போரில் 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,1802-இல் ஓடாநிலையிலும்,1804-இல் அறச்சலூர் போரிலும் தீரன்சின்னமலையின் படை பெறும் வெற்றி பெற்றது.ஓடாநிலைப்போரில் வெள்ளைத்தளபதி கர்னல் மேக்ஸ்வெல்லின் தலையைக் கொய்து கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடப்பட்டது.சின்னமலையின் ஓடாநிலைக்கோட்டையை கடந்துதான் கேரளத்தின் மலபார் பகுதிகளுக்கு வெள்ளயர்கள் செல்லவேண்டும்.


போரில் வெற்றி பெறமுடியாத வெள்ளையர்கள் கொங்குநாட்டின் ஆட்சிபொறுப்பை விட்டுத்தருவதாகவும்-வரிவசூலின் மூன்று பகுதியை எடுத்துக்கொள்ளவும் வேண்டி சின்னமலைக்கு சமரசம் செய்து கொள்ள தூது அனுப்பினாரகள்.அதை ஏற்றுக்கொள்ள மறுத்து சின்னமலை தொடர்ந்து போராட தனது படையை பலப்படுத்தினார்.


இந்த நிலையில் பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமக்கு எதிராக-தடுக்க முடியாத கடல் அலையாக வளர்ந்து வரும் தீரன்சின்னமலையை ஒழித்தே தீரவேண்டும் என முடிவுசெய்தது.கொல்கத்தா தலைமையகத்தில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கைகள் கொண்ட பெறும் பீடங்கிப்படை ஒன்று ஓடாநிலைக்கோட்டையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.


சின்னமலையின் போர்ப்படைத் தளபதியும்-உற்ற நண்பனுமான சுபேதர்வேலப்பன் வெள்ளைப்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டு வெள்ளைப்படையில் சுபேதராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.ஆங்கிலேய அதிகாரிகளிடம் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை வளர்த்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஓலையின் வாயிலாக வெள்ளைப்படையின் நடவடிக்கைகளை ரகசியமாக சின்னமலைக்கு அனுப்பி வந்தார்.


அதன்படி செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் மூலமாக செருப்பின் உள்ளே வைத்து தைக்கப்பட்ட ஓலை சின்னமலைக்கு வந்து சேர்ந்தது.அந்த ஓலையில் அதிநவீன பெறும் பீரங்கிப்படை ஓன்று ஓடாநிலையை நோக்கி வருவதாகவும்-அத்தகைய படையின் முன்பு நமது மண்கோட்டையும்,போர்ப்படையும் தக்குப்பிடிக்க இயலாது என்றும் உடனடியாக தாங்கள் தப்பிச்செல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்ளபட்டிருந்தது.தனது கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டையை காலி செய்து கொண்டு பழநிக்கு அருகில் உள்ள கருமலைக்கு தப்பிச்சென்றார்.


ஓடாநிலைக்கோட்டையை அடைந்த ஆங்கிலேயப் பீராங்கிப்படையின் தளபதி சின்னமலையால் தம் படைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார்.கோட்டையை சோதனையிட உத்தரவு இட்டார்.சோதனையில் பீரங்கிப்படையின் வருகை குறித்து சுபேதார்வேலப்பன்-தீரன்சின்னமலைக்கு எழுதிய ஓலை கிடைக்கப்பெற்றது.அந்த இடத்திலேயே சுபேதார் வேலப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஓடாநிலைகோட்டை பீரங்கிப்படையால் மண்ணோடு மண்ணாக தகர்க்கப்பட்டது.


போரில் வெல்லமுடியாத சின்னமலை சகோதரர்களை சூழ்ச்சியின் மூலமாக சொந்த இனத்தவர்களே காட்டிக்கொடுதார்கள்.கைது செய்யப்பட்ட சின்னமலை சகோதரர்கள்,கருப்புசேர்வையுடன் ஆடி-18 (31-7-1805) இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.இறந்துபோன மாவீரர்களின் உடல்களை கழுகளுக்கு இறையாக்கினார்கள்.


கொங்குதமிழகத்தின் சுதந்திரதீபம் அணைந்தது..சிவன்மலையை சுற்றி இன்றும் தீரன்சின்னமலையின் நினைவுகள் சுழன்றுவருவதாக நான் நம்புகிறேன்.அடிமைத்தலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைபடுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.


இத்தகையக மாவீரர்கள் எந்த விசாரணைகளும் இல்லாமல் வெள்ளை அரசாங்காத்தால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.அவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார்கள். ஆம் மாவீரர்கள் மீண்டும்,மீண்டும் பிறந்தார்கள்.150-ஆண்டுகளுக்கு பிறகு பாரதத்தாயின் விடுதலை மலர்ந்தது.தீரன்சின்னமலையைப் போன்ற மாவீரர்களின் கனவு பலித்தது.உலகில் மனிதஉரிமைகள் நசுக்கப்படும்பொழுது மாவீரர்கள் மீண்டும் பிறப்பார்கள்.

மாவீரனின் தேசப்பற்றை போற்றும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாவீரனின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசுவிழாவாக தொடர்ந்து நடத்தப்படும் என்று அன்றைய முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தார்.அத்துடன் ஓடாநிலையில் மவீரனுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்தார்..இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18(3-8-11) அன்று மாவீரனின் 206-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.

ஈழத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிங்களவர்களின்அடிமைச்சாசனத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த சோகம் இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் என்று சொன்னால்அது மிகையாகது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஈழவிடுதலை போராளிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இந்த ஆண்டின் துவக்கம்வரை போராடி வீழ்ந்துள்ளார்கள்.

தீரன்சின்னமலையின் நினைவு தினமான இன்று ஈழத்தில் மீண்டும்போராளிகள் எழுவார்கள்!ஈழத்தமிழர்களின் விடுதலைக்கனவு பலிக்கும்.நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையில் தனிஈழம் ஒன்று அமைத்தே தீருவேன் என்று முழங்கினார்கள்.நிச்சயம் ஈழத்தில் தனி ஈழம் ஒன்று மலர்ந்தே தீரும் என்று நம்புவோம்.

                   தீரன்சின்னமலைக்கு அரசு அளித்த மரியாதை

முன்பு தீரன்சின்னமலை நினைவாக திருச்சியை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்துக்கழகமும், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமும் இருந்தது.சென்னை கிண்டியில் சிலை எடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தீரன்சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது.இந்திய அரசின் தபால் தந்தித்துறை 31-7-2005 இல் தபால் தலை வெளியிட்டது.

மாவீரனின் தேசப்பற்றை போற்றும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாவீரனின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசுவிழாவாக தொடர்ந்து நடத்தப்படும் என்று அன்றைய முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தார்.அத்துடன் ஓடாநிலையில் மவீரனுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்தார்..இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18(3-8-11) அன்று மாவீரனின் 206-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.

 மண்ணுரிமைக்காக மகத்தான தியாகம் செய்த மாவீரர்களின் பாதம்தொட்டு சமூக-அரசிய்ல்-சுற்றுச்சூழல்-குற்றவியல்-புலானாய்வு-செய்திகளை-கருத்துகளை இந்த வலைதளம் வாயிலாக உங்களுடன் -நீங்கள் எங்களுடன் உண்மைகளை உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்வோம். 
டி.கே.தீரன்சாமி.







.


best links in tamil
More than a Blog Aggregator