வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

25-04-2014 பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

நீண்ட தூரம் பயணித்து வரும் இந்த வழக்கு தொடர்பான ஒரு பார்வை.

கடந்த 25/05/1991 ல் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வருகை தந்தபோது படுகொலை செய்யப்படுகிறார்.

கொங்கு தமிழகத்தில் பிறந்த கார்த்திகேயன் ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையிலான மத்திய சிறப்பு புலனாய்வுக்குழுவால் 20/01/1992 ல் பூந்தமல்லி சிறப்புத் தடா நீதிமன்றத்தில் 41 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் இறந்து போனவர்கள்,தலைமறைவாக இருப்பவர்கள் என 15 நபர்கள் தவிர 26 நபர்களுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 28/01/1998 ல் மரணதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

குற்றவாளிகள் தரப்பிலான உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில்11/05/1999 ல் முருகன்,நளினி,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தும்,.ராபர்ட்,பயாஸ்,செயக்குமார்,ரவிச்சந்திரன் 
உள்ளிட்ட நால்வரின் மரணதண்டனையை, ஆயில் தண்டனையாக குறைத்தும்,மற்ற 16 பேரை விடுதலை செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

08/10/1999 ல் நளினி உள்ளிட்ட நால்வரின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

25/04/2000 ல் தமிழக ஆளுநர் பாத்தீமா பீவி 161-வது சட்டப்பிரிவின்படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நால்வரின் கருணை மனுவின் மீது-நளினியின் மரணதண்டனையை மட்டும் ஆயிள் தண்டனையாக குறைத்தும்,மற்ற மூவரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

72-வது சட்டப்பிரிவின்படி குடியரசுத்தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மரணதண்டனையை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில் 26/04/2000 ல் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைத்தனர்.

04/05/2000 ல் கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும்,அதில் கூட்டணிக் கட்சிகளாக தமிழகத்தைச் சார்ந்த,தி.மு.க,ம.தி.மு.க,பா.ம.க கட்சிகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள் என்பது கவனிக்கதக்கது.

21/06/2005 ல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து 05-ஆண்டுகள் தாமததுக்கு பிறகு குடியரசு தலைவரின் பரிசீலைனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

12/08/2011 ல் 11 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவரால் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

09/09/2011 ல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு உலகத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியது.தமிழகத்தில் போராட்ட அலையை ஏற்படுத்தியது.

30/08/2011 உயர்நீதி மன்றம் மரணதண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

01/05/2012 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

18/02/2014 ல் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனையை ஆயிள் தண்டனையாக குறைத்தும்,இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது.

தீர்ப்பு வெளியிட்ட அதே நாளில் நமது தமிழக முதல்வர் சட்டசபையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாகவும்,இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் அளிக்கவேண்டும் என்றும் கடிதம் எழுதினார்.

ஆனால்,மத்திய அரசு தமிழக முதல்வரின் கடிதத்துக்கு விடுதலை செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என பதில் கடிதம் அனுப்புவதை விடுத்து,உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யக்கூடாது எனவும்,விடுதலை குறித்து மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் வழக்கு தொடுத்தது.

விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிக்கையுடனும்,மகிழ்வுடனும் காத்திருந்த ஏழு பேர் உள்ளிட்ட குடும்பத்தினர்களும்,தமிழக மக்களும்,உலகத்தமிழர்களும் மத்திய அரசின் இந்த பழிவாங்கும் அணுகுமுறையை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

25/04/2014 நேற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விடுதலை குறித்து 05 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.26/04/2014 இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் விடுதலை என்பது இன்னும் நீண்ட நெடிய போராட்டத்தை உள்வாங்கும் என்பது திண்ணம்.தமிழர்களாகிய நாம் போராடத்தயாராக இருப்போம்.


best links in tamil
More than a Blog Aggregator