திங்கள், 6 ஏப்ரல், 2015

மோடியின் இலங்கைப்பயணம் சீனாவை சீண்டிப்பார்க்குமா?

modi-maithee

இதயச்சந்திரன்:-

திரு.மோடி,ஒரு மிகச் சிறிய நாட்டின் பக்கத்திலுள்ள அணுஆயுத வல்லரசு இந்தியாவின் பிரதமர் அவர். ஆசியாவில் சீனாவை அடக்க அமெரிக்க யானைப்பாகன் பயன்படுத்தப்போகும் அங்குசம்.


இவ்வாறாக இலங்கை அரசியலில் இருந்து இந்திய தேசத்தை வர்ணிக்கலாம்.

மறுபுறம் பார்த்தால் மகிந்த ஆட்சி உருவாகுவதற்கு உதவிய நாடு. அமெரிக்காவையும், சீனாவையும் ஓரங்கட்ட சீபாஒப்பந்தத்தை நிறைவேற்றிடத் துடித்து தோல்வியுற்ற நாடு என்றும் கூறலாம்.


80 ஆரம்பத்தில் உருவான அமெரிக்க- இந்திய பனிப்போர், 87 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக புதிய வடிவம் அடைந்தது. இன்றும் அந்த ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால் கொழும்புத் துறைமுகத்தில் ஒரே மாதத்தில், இரு தடவைகள் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்ததால், ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.

2009 இற்குப்பின்னர், இந்தியாவின் அமெரிக்காவுடனான பனிப்போர் சீனாவுடன் தாவி, இப்போது துறைமுகநகர திட்டம் கிடப்பில் போடும் அளவிற்கு முறுகல் நிலையை எட்டியுள்ளது.

அதேவேளை ஆசியப்பிராந்திய புதிய சமநிலை உருவாக்கத்தில் வியட்நாமிற்கு அடுத்ததாக இலங்கையில்தான் அமெரிக்க-இந்திய தந்திரோபாயக்கூட்டு, இயங்குநிலையை வந்தடைதுள்ளதாகக் கணிப்பிடலாம்.

இந்த வருடத்திற்கான சீனாவின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி 6.5% ஆகக்குறையுமென மதிப்பிட்டாலும், ஆசியாவில் அதன் மேலாதிக்க விரிவாக்கத்தை இந்தியா பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இதனடிப்படையிலேயே அமெரிக்காவுடன் ஒரு தற்காலிக தந்திரோபாயக் கூட்டு ஒன்றினுள் தன்னை பிணைத்துக்கொள்ள இந்தியா முன்னிற்பதைக் காணலாம்

ஆழமாக நோக்கினால்  அமெரிக்க சார்பு அணிகளின் பலவீனத்தையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறது என்பதை அவதானிக்கலாம்.

அதாவது அரச வட்டி வீதத்தை 1.75 ஆகக் கீழிறக்கிய தென்கொரியாவின் பொருண்மியப் பலவீனமும், இக்கட்டான காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய தாங்குதிறன் (stress test ) ஐரோப்பிய வங்கிகளுக்கு இல்லை என்கிற மதிப்பீடுகளும், திறைசேரி திவாலாகிப்போன கிரேக்கத்தின் கையறுநிலையும், இலங்கையின் புதிய ஆட்சிக்கு கடன் கொடுக்க மறுத்த அனைத்துலக நாணய நிதியமானது (IMF) பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் உக்ரேய்ன் இற்கு ஓடோடிச்சென்று 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வரும் காரணங்களையும் இந்திய புரிந்து கொள்கிறது.

அமெரிக்காவின்பங்குச் சந்தை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பாவின் பொருளாதாரம் அதன் மத்திய வங்கியிடம் (ECB)கையேந்திக் கொண்டிருக்கிறது

கார்பொரேட் முதலீட்டாளர்கள் ஆசியாவை நோக்கி நகர்கின்றார்கள். சீனாவின் வளர்ச்சி வீதம் குறைவடைவதனால், அவர்கள் முதலீட்டிற்கான வேறு சாதகமான நாடுகளைத் தேடுகின்றார்கள். அதுமட்டுமல்லாது அமெரிக்க- சீன அதிபர்களின் விஜயமானது இந்தியாவை நோக்கி இக் கார்பொரெட்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

ஆக மொத்தம் ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே இது  சாதகமாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

அதேவேளை சீனாவின் முத்துமாலை சுற்றிவளைப்பினை உடைத்தெறிய வேண்டுமாயின், யாரோடு கூட்டுச் சேர்ந்தாவது, தன்னைப்பொருண்மிய ரீதியாகவும், படைத்துறைரீதியாகவும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு டெல்லியின் தென் வளாகம் வந்திருப்பது போல் தெரிகிறது

இதில் விசித்திரமான நகர்வுகளும் நடைபெறுகின்றன. அதாவது அமெரிக்க- இந்திய இராஜதந்திர நெருக்கத்தால் சீனாவின் முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்கிறது.

தற்போதுள்ள 400 மில்லியன் சீன முதலீட்டினை, 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் பல உடன்பாடுகளில் மோடியும் ம் க்ஷி ஜின்பிங்கும் கடந்த வருடம் கைச்சாத்திட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பராக் ஒபாமாவின் அண்மைய விஜயம் 4 பில்லியன் முதலீட்டைக்கூடக் கொண்டுவரவில்லை

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவோடு ஒரு இணக்கப்பாடு தனக்கு இருப்பதுபோல் மைத்திர்-இரணில் ஆட்சி அதிகாரத்திற்கு காட்டிக்கொள்ள இந்தியா முனைகிறது.

ஆட்சி மாற்றமானது  நாடாளுமன்றத்  தேர்தலோடு முற்றுப்பெறும் வரை, இதே போக்கில் இந்தியா தனது காய்களை நகர்த்துமென எதிர்பார்க்கலாம்

.நா.அறிக்கை தொடக்கம், முன்னைய ஆட்சியாளர்களால் களவாடப்பட்டதாகச் சொல்லப்படும் பணத்தினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரும் விவகாரம்வரை, இந்தியாவின் அனுசரணையை அரசும் எதிர்பார்க்கும், இந்தியாவும் அதற்காகப் பாடுபடுவது போல் காட்டிக்கொள்ளும்.

நாட்டின் வருமானத்தைப் பொறுத்தமட்டில், கையும் கணக்கும் சரியாக இருப்பதால் மேலதிக கடன் வழங்கத் தேவையில்லைஎன்று கிறிஸ்டின் லகாட்டின் ( இவர்தான் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளர் என்று நம்பப்படுகிறது) அனைத்துலக நாணய நிதியம் இலங்கையைக் கைவிட்ட விவகாரமும் இந்தியாவிற்கே சாதகமாக அமையப்போகிறது

அதாவது உறுதியான ஆட்சி ஏற்படும்வரை, வாக்குறுதிகளை வழங்கும் வைபவங்களே நிகழும். பிரித்தானியப்பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்தாலும் இதுதான் நடக்கும்

இந்த வகையான இடைக்கால நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் போது, ‘குறைநிரப்பும்பங்கினை இந்தியா மனமுவந்து ஏற்கும் நிலை தோன்றுமென்பதே நிஜமானது.

இந்த விஜயத்தின் போது ஏற்கனவேயுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் (FTA ) ஆழ- அகலங்கள் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் இந்தியாவிற்குச் சார்பான வர்த்தக உபரி ( Trade Surplus) அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வெகுவாக அதிகரிக்கும்

இந்த அச்சத்தினை வெளிப்படுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் பட்டாலி சம்பிக்க ரணவக்க, இலங்கையின் பொருளாதாரமானது முற்றுமுழுதாக இந்தியாவின் பிடிக்குள் அகப்படுவது ஆபத்தானது  என்கிறார். அதாவது இதனை இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ‘கடனை ஓரிடத்தில் இருந்து மட்டும் வாங்காமல், எல்லா வல்லரசுகளிடமிருந்தும் பகிர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள்என்பது போலிருக்கிறது சம்பிக்கவின் அறிவுரை

அதாவது மகிந்தர் விட்ட தவறை நீங்களும் விடாதீர்கள்என்று சொல்ல வருகிறாரா? இல்லையேல் இந்தியா குறித்தான மகாவம்ச மயக்கத்திலிருந்து பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இருப்பினும் சிங்களத்தின் இராஜதந்திர மைய ஓட்டத்திலிருந்து முரண்படாமல் அவர் பேசுகிறார் என்பதுதான் உண்மை வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘அமைச்சர்என்கிற வகையில் இவரையும் சந்திப்பாரென எதிர்பார்க்கலாம்.

இவரின் வருகையை இரண்டு தரப்பினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுதரப்பு மைத்திரி- மகிந்த   கட்சி ( கள்).

கூட்டமைப்பைப் பொறுத்தவரை, 13 வது திருத்தச் சட்டத்தில் எஞ்சியுள்ளவற்றை வடமாகாண சபையில் பிரயோகிப்பதற்கு, புதிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அத்தோடு வடமாகாணசபையிலுள்ள அமைச்சுக்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும், நீண்ட கால வேலைத்திட்டங்களுக்கும் இந்தியாவின் நேரடி உதவி கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் விடுப்பார்கள். ஆனால் சம்பூரில் கடற்படை பிடித்து வைத்திருக்கும் மக்களின் நிலங்கள் குறித்து எவர் பேசுவார் என்று தெரியாது

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத்தெரிகிறது. நோர்வே தூதுவர் மற்றும்  அமெரிக்க இராஜதந்திரிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிடம் கேட்ட இன அழிப்பு தீர்மானம் ஏன்?’ என்ற கேள்வியை, இந்தியப்பிரதமரும் கேட்பார் என எதிர்பார்க்கலாம்

மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் பெரும் இராஜதந்திர நெருக்கடியை இத்தீர்மானம் கொடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் இவர்கள் விடுபடவில்லை. வடக்கிற்கு செல்லும் இராஜதந்திரிகள் யாவரும் தமது உரையாடல்களில் இக்கேள்வியையும் இணைப்பார்கள்.

அடுத்ததாக, கொழும்பு அதிகார மையத்தைப் பொறுத்தமட்டில், மைத்திரி தரப்பினரே மோடியோடு நெருக்கத்தை ஏற்படுத்த முனைவார்கள் என்று கூறலாம். வரலாற்று ரீதியான அரசியல் உறவும் அதற்கு ஒரு காரணம். .தே.கட்சியானது மேற்குலகிற்குச் சார்பானது என்கிற இந்தியாவின்  இறுகிப்போன நிலைப்பாடும்‘, இக்கூற்றிக்கு வலுவூட்டும்.

சீனாவை நோக்கிய முனைவாக்கம் தடுக்கப்பட வேண்டும்என்பதோடு, மேற்குலக ஆதிக்கத்தை அனுமதிக்கும் தரப்பு அதிகார மையத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் இந்திய வெளியுறவு கொள்கைப் பிரிவு கவனம் செலுத்த முற்படும் ஆகவே மைத்திரியோடு மகிந்தாவையும், நரேந்திர மோடி அவர்கள் சந்திக்கும் வகையில் இந்தியத் தரப்பு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்

பூகோள எதிர்கால அரசியலையும், இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலையும் இணைத்துப் பார்க்கும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரியின் தலைமையிலான, ஆனால் மகிந்த அணியின் ஆதரவு பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதை ஒரு தரப்புவிரும்பும்.

அச் சக்தி எதுவென்பதை தேர்தலின் போதும், அது முடிந்த பின்னரும் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஆட்சிமாற்றத்தின் திசையை, தமக்குச் சார்பாக திருப்ப வருகிறாரா மோடி என்கிற பேச்சும் காதில் விழுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:- தமிழ் தேசிய சிந்தனைப்பள்ளி என்ற வலைதளத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது.  www.eelamnews.com கட்டுரையாளர் நண்பர்.இதயச்சந்திரன் அவர்களால் பதிவிடப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: