புதன், 10 ஆகஸ்ட், 2011

முதல்வருக்கு பிரித்தானிய தமிழர்பேரவை பாராட்டு!


தமிழக முதல்வர் அம்மா அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எமது கொங்குதமிழர் பேரவையின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு ஈரோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இலங்கையில் தனி ஈழம் அமைத்தே தீருவேன் என்று முழங்கினார்.அதுபோல நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவைப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.அதைச்செயல் படுத்தும் வகையில் கடந்த தினத்தில் தமிழ்நாடுசட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மாணம் ஒன்றை நிறைவேற்றி உள்ளார். இத்தீர்மாணத்தை  பிரித்தானிய தமிழர் பேரவை பாராட்டி உள்ளது.
பிரித்தானியதமிழர்பேரவையின் பாராட்டுக்கடிதம்:-
சிறீலங்கா அரசாங்கத்தை போர்க்குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக பிரகடனம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், சிறீலங்கா அரசாங்கம் மீது பொருண்மியத் தடை ஏற்படுத்தி அடிபணிய வைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து, ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.
ஈழத் தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய செய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்றும் தங்களின் தீர்மானத்தில் கூறியுள்ளதையும் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஆறரைக்கோடி தமிழ்நாட்டு உறவுகளின் தீர்மானமாக நாம் இதனைப் பார்க்கின்றோம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் தாங்கள் வெளியிட்ட கருத்துக்கள் எமக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாக, கடந்த எமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தோம்.
தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானமானது, அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
ஈழத்தில் பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது, மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன, ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்களை தங்களின் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. இவை அனைத்தும் தமிழின அழிப்பின் கட்டங்கள் என்பதால், இன அழிப்பு இடம்பெறுகின்றது என்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
தங்களது அதிகார எல்லைக்கு உட்பட்டு இந்திய அரசை வலியுறுத்துவேன் எனக் கூறியதுபோன்று, தாங்கள் மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகளுக்கு உலகத் தமிழர்கள் நிச்சயம் துணை நிற்பர் என நம்புகின்றோம்.
அத்துடன், தங்களின் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து, ஈழத்தமிழ் மக்களின் மீது தமது அன்பையும், கரிசனையையும்  மீண்டும் வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் நாம் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அகில இந்திய மட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னகர்த்தி, அநீதி இழைக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க தாங்கள் துணை நிற்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
பேச்சுடன் நின்று விடாத தங்களின் செயல்வீரத்திற்கு எமது மனம் நிறைந்த நன்றியையும், பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: