செவ்வாய், 20 செப்டம்பர், 2011

டக்லசை கைதுசெய்ய முடியாதா? முடியாது!

1986 நவம்பர் 1ம் தேதி சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை டக்லசு தேவனந்தா சுட்டுக்கொலை செய்தார்.இந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்தார்.


அதன் பிறகு 1988 நவம்பரில் பத்து வயது சிறுவனை கடத்தி 7லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.கீழ்பாக்கம் காவல்துறையினரால் சிறுவன் கடத்தல் வழக்கில் டக்லசு கைது செய்யப்பட்டார்.ஈழ விடுதலைப் போராளியாக தனது வாழ்வை தொடங்கிய டக்லசு தேவனந்தா தமிழகத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பணம் பறிக்கும் சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார்.


பிறகு 1989ல் டக்லசு மீது தேசியப் பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது.பின்னர் பிணையில் வெளியே வந்து இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.அங்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவராக இருந்தார்.இலங்கையில் டக்லசை கைதுசெய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்றது.இந்த நேரத்தில் பாரதப்பிரதமர் ராசீவ்காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இதனால் டக்லசை கைது செய்யும் முயற்சி கைவிடப்பட்டது.


இந்த வழக்கு சென்னை 6வது செசன்சு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 1994ம் ஆண்டு மேற்படி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது..


Imageதற்பொழுது இலங்கையின் தமிழ் அரசியல் தலைவராக, ஆளும் கோத்தபயே கூட்டணியில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில்துறை அமைச்சராக உள்ளார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு சூன் மாதம் இலங்கை அதிபர் ராசபக்சே,டக்லஸ் தேவானந்தாவுடன் அரசு முறைப்பயணமாக தில்லி வந்தார்.அவருக்கு மத்திய அரசு சார்பில் ராசமரியாதை அளிக்கப்பட்டது.பாரதப்பிரதமர் மன்மோகன்சிங்,டக்லசை கை குலுக்கி மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.இதைப்பார்த்த தமிழகம் அதிர்ந்து போனது.


அந்த நேரத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழத்தின் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி டக்லசை கைது செய்ய வேண்டுமென கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் டக்லசு பத்திரமாக இலங்கை திரும்பினார்.புகழேந்தியின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளசு தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை? தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.


கடந்த மார்ச் மாதம் தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டியும்,தமக்கு முன் பிணை வழங்க வேண்டியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்லசு மனு தாக்கல் செய்தார்.இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்த உயர்நீதிமன்றம்,டக்லசு நேரில் ஆசராகி முன் பிணை பெறலாம்.அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.


கடந்த மாதத்தில் நாகை மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்டனர்.இந்த தாக்குதலின் பின்னனியில் டாக்லசுவின் தூண்டுதல் இருப்பதாக நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டினார்.அத்தகைய தாக்குதலுக்கும் எமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என டக்லசு மறுப்பு தெரிவித்தார்.


வழக்கறிஞர் புகழேந்தியின் மனுவுக்கு இன்று (செப்-20) சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தியப் பேரரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளது:-


கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை.இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


டக்லசு தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார்.இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது.அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன்,நாகப்பன் ஆகியோர் விசாரணையை நான்கு வாரகாலத்துக்கு தள்ளி வைத்தனர்.


அதாவது திருநாவுக்கரசை கொலை செய்யத டக்லசு குற்றமற்றவரா? கொலை செய்தது சரியானது என்று மத்திய அரசு வாதிடுகிறதா? நமது தேசத்தில், நமது தமிழனை சுட்டுக்கொலை செய்துவிட்டு,தேடப்படும் குற்றவாளியாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒரு கொடும் கொலைக் குற்றவாளியை அண்டைநாட்டின் அமைச்சர் என்பதால் கைதுசெய்ய முடியாது என காரணம் கற்பிப்பது அபத்தமானது.

best links in tamil
More than a Blog Aggregator