புதன், 31 ஆகஸ்ட், 2011

தீரன்சின்னமலையின்-விநாயகர் சதுர்த்தி!

ஒரு சமயம் பார்வதிதேவியார் குளக்கரையில் குளிக்க செல்லும் பொழுது வெளியில் காவல் காக்க யாரும் இல்லை.அதனால் அங்கிருந்த சந்தனக் குழம்பை எடுத்து உருவம் ஒன்றை அமைத்து அதற்கு உயிர்கொடுத்து நான் குளித்துவிட்டு வரும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று பணித்து விட்டு குளிக்கச் செல்கிறார். பார்வதியால் உயிர் கொடுக்கப்பட்டதால் அது பிள்ளையாகி விட்டது.

அந்தச்சமயம் பார்த்து தமது மனைவியை பார்க்க வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுக்கிறார்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை கொய்துவிட்டு உள்ளே செல்கிறார்.
நீராடிவிட்டு வெளியில் வந்த பார்வதியார்,சிரச்சேதம் செய்யப்பட்ட பிள்ளையாரைக் கண்டு கோபம் கொள்கிறார்.தான் உருவாக்கிய பிள்ளயாரை சிவனே சிரச்சேதம் செய்ததை அறிந்து ஆத்திரம் கொண்ட பார்வதியார் காளியாக உருமாறி மூவுலகிலும் தமது கண்ணில் கண்டதை எல்லாம் அழித்து ஒழிக்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட தேவர் கூட்டம் சிவனை சந்தித்து முறையிடுகிறார்கள்.பார்வதியாரை சாந்தப்படுத்த வேண்டி தனது பரிவாரங்களை வடதிசையில் அனுப்பி முதலில் தென்படும் ஜீவராசியின் தலையை கொய்து வருமாறு உத்தரவு இடுகிறார்.வடதிசை நோக்கி சென்ற பரிவாரங்களின் பார்வையில் முதலில் தென்படும் யானையின் தலையை கொய்து வந்து சிவனிடம் தருகிறார்கள்.

அந்தத்தலையை பார்வதியால் உருவாக்கி, தன்னால் வெட்டுண்டு கிடக்கும் பிள்ளையின் முண்டத்தின் மீது பொருத்தி உயிர்கொடுக்கிறார் சிவபெருமான்.அந்தப்பிள்ளைக்கு கணேசன் என்று பெயர் சூட்டி தனது கணங்களுக்கு கணபதியாக நியமித்துக் கொள்கிறார்.இதனால் சாந்தம் அடைந்த பார்வதியார் கணபதியை அணைத்துக் கொண்டு மனம் குளிர்கிறார்.

இந்த நிகழ்வு ஆவணி சுக்கில பட்ச சதுர்த்தி அன்று நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன! விநாயகர் அவதரித்த இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1790 காலகட்டத்தில், கொங்குநாட்டில்! மைசூர் மன்னன் திப்புசுல்தானின் வரிவசூலை பறித்துக்கொண்டு "சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை எடுத்துக் கொண்டான் என உமது மன்னனிடம் போய்ச்சொல்' என்று முழங்கிய இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலையும்-கன்னடத்து போர்வாள் திப்புசுல்தானும் எதிரும்-புதிருமாக மோதிக்கொண்டு வீழ்வதைவிட-நமது தாய் திருநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டி அடிக்க- இருவரும் இணைந்து போராட வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து-வெள்ளையர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார்கள்.

சின்னமலை தாம் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஒரு வீரவிநாயகர் சிலையை நிருவினார்.தீரன்சின்னமலையின் இந்த வெற்றிவிழா ஒவ்வொரு முறையும் ஒரு விநாயகர் சதுர்த்தியாகவே கொண்டாடப்பட்டது.மாவீரனால் நிருவப்பட்ட விநாயகர் சிலைகள் பலவும் துரோகிகளால் அழித்து ஒழிக்கப்பட்டது.

இருப்பினும் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி மேடையில் சுமார் 12 அடி உயரத்தில் வீரவிநாயகர் சிலை உள்ளது.

வீரவிநாயகர் சிலையை நிருவிய மாவீரன் தீரன்சின்னமலையின் பெயர் சொல்லும் படி இன்றும் வழிபடும் பக்தர்களுக்கு தம் திருவருளை வீர அருளாக தந்து கொண்டிருக்கிறார்.இப்பொழுதும் முதன் முதலாக இந்திருத்தளத்திற்கு
வருகை தரும் பக்தர்களுக்கு அவர்கள் மனதில் ஒரு எழுச்சியினையும்,
ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்தும் விதமாக வீரவிநாயகர் காட்சி தருகிறார்.

1893-ல் லோகமான்ய பாலகங்காதர திலகர் வெள்ளயர்களுக்கு எதிராக தேசியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்தெடுக்கும் பொருட்டு விநாயகர்சதுர்த்தி விழாவை வடமாநிலங்களில் பிரபலப்படுத்தினார் என்று இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அதற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொங்குநாட்டின் விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை வீரவிநாயகர் சிலை நிருவி வாழிபாடு நடத்தி விடுதலைப்போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீரன்சின்னமலை-திப்புசுல்தான் இருவரின் விடுதலைப்போராட்ட வரலாறு! இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் சரித்திரச்சான்றுகளாக இருந்து வருகிறது என்பதை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.
best links in tamil
More than a Blog Aggregator

5 கருத்துகள்:

subshvel சொன்னது…

தெனிந்தியர்களின் வரலாறு அதிலும் தமிழர்களின் சரித்திரம் அனைத்துக் காலகட்டங்களிலும் மறைக்கப்பட்டது உண்மையே!இது போன்ற நல்ல பதிவர்களுக்கு கருத்துரைகள் எதுவும் இதுவரை இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

நிலாரசிகன் ஜெயமாறன் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே மிகவும் அருமை இன்டிலியில் இணைக்கவிலைய நண்பரே

suryajeeva சொன்னது…

பொதுவாகவே ஆன்மீக கதைகள் சில மிகைப்படுத்தியே கூறப் படுகிறது...
அப்படி கூறப் படும் பொழுது சில சந்தேகங்கள் மனதை பிராண்டி நம்மை பைத்தியகாரனாக்கி விடுகிறது...
ஒன்று: முக்காலமும் உணர்ந்த சிவனுக்கு வெளியில் காவலில் நிர்ப்பது தன் மகன் தான் என்பது தெரியாதா?
இரண்டு: அன்பே சிவம் என்று மிகவும் அன்பானவர் என்று சித்தரிக்கப் படும் சிவனுக்கும் இப்படி ஒரு கோபம் எப்படி வந்தது?
மூன்று: கணங்களுக்கு கனபதியாய் உடனே நியமித்ததால் வாரிசு அரசியல் தவறு இல்லை என்று சொல்ல வருகிறார்களா?
இனி உங்கள் பதிவில் சிறு திருத்தம்..
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பார்வதி சந்தனத்தை வைத்து விநாயகரை உருவாக்கவில்லை மாறாக தன் உடலில் இருந்த அழுக்கை வைத்து தான் உருவாக்கினார் என்பது புராணம்...
நம் இருவர் சிந்தனையும் ஒன்றாக உள்ளது, என்ன நீங்கள் ஆன்மீக வழியில் இருக்கிறீர்கள், நான் நாத்திக வழியில் இருக்கிறேன்..

ராக்கெட் ராஜா சொன்னது…

தீரன்சின்னமலை-திப்புசுல்தான் இருவரின் விடுதலைப்போராட்ட வரலாறு! இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் சரித்திரச்சான்று

உண்மைதான் நண்பரே நல்ல பதிவு

சாகம்பரி சொன்னது…

இது எனக்கு புதிய தகவல். நன்றி.