திங்கள், 8 அக்டோபர், 2012

கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள்


"தமிழ் கலைச் சொல்லாக்கத்தை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடுத்த தலைமுறைகளுக்கு நேர்மையாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும்,'' என, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசினார்.

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது. விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசியதாவது: காலையில் இருந்து மாலை வரை நாம் செய்யும் செயல்களைக் கூறும் போது, ஆங்கிலமும், தமிழும் கலந்து கூறுகிறோம். இப்படி பேசுவது படித்தவர்களாகிய நாம் தான். பாமர மக்கள் இப்படி பேசுவது கிடையாது. அதனால் தான் சொல் சிதைவு, மொழி சிதைவு ஏற்பட்டுவிட்டது. இதை மாற்றி அமைக்க இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பேருந்து நிலையம் என்றால் பலருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழில் சொல் பஞ்சம் என்பதே இல்லை. ஆனால், பயன்படுத்துவதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என நினைப்பர் என்று கருதி ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால், முழுமையாக ஆங்கிலம், தமிழ் பேசுபவர்களை பார்த்ததில்லை.

ஆங்கில மோகம்: நாம் ஆங்கில மோகத்தில் விழுந்து விட்டோம். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே நேரம், தமிழ் மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்; எழுத வேண்டும். தமிழகத்தில் கரன்ட் என்பது மின்சாரம் ஆவதற்கு, 24 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரோம் நகரத்தில் சர்ச்சிற்கு வருபவர்களுக்கு, காலணிகளைத் துடைப்பது ஒருவரின் வேலை. அவர் யாரிடமும் ஊதியம் வாங்குவதில்லை. ஆனால், லத்தின் மொழி பேசுபவர்களிடம் மட்டும் ஊதியம் வாங்குவார். இது, அவருக்கு உள்ள மொழிப் பற்றைக் காட்டுகிறது.

தமிழ் பெயர் தவிர்ப்பு: நல்ல தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வது கூட கிடையாது. காரணம், தயக்கம். உணவு விடுதிகளில் சோறு கேட்கும் போது, "ரைஸ்' கொடுங்கள் என்கிறோம். ஆங்கிலேயருக்கு சோறு, அரிசிக்கு "ரைஸ்' என்று ஒரே பெயர் தான். தமிழை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, கலைச் சொல்லாக்கத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாகர்கோவிலில் "இருக்கின்றது' என்ற சொல், மதுரை வரும் போது "இருக்கு' என, மாறுகிறது. அது, விழுப்புரம் வரும்போது "கீது' என்று மாறுகிறது. அதே சென்னைக்கு வரும்போது "தோ' என்று ஒரு எழுத்தாக மாறுகிறது. இது ஆவணமாக மாறிவிடும். இந்த பதிவிற்கு நாம் காரணமாக மாறிவிடக்கூடாது என்பது இந்த கருத்தரங்கின் நோக்கம். கம்பர், இராமாயணத்தில் ராமன் என்று கூறமாட்டார்; இராமன் என்று தான் கூறுகிறார். லட்சுமணனை இலக்குமணன் என்று தான் கூறுகிறார்.

கொரியாவில் 450 சொல்: பாரதிக்கு தமிழ் மேல் உணர்வு இருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம் வேண்டும் என, கனவு கண்டார். தற்போது, மதுரையில் சங்கமும், தஞ்சையில் பல்கலைக் கழகமும் வந்துவிட்டது. இங்குள்ள மொழியை அங்கு கொண்டு சென்று ஆங்கிலத்தை பலப்படுத்திக் கொண்டனர். உலகில் உள்ள மொழிகளில், 20 சதவீதம் தமிழ் மொழி சொற்கள் உள்ளன. கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள் உள்ளன. "தேர் இஸ் சம்திங்' என்று சொன்னால், உடலில் உள்ள எட்டு கலோரிகள் போகின்றன. அதே வார்த்தை, "அங்கு ஏதே உள்ளது' என்று தமிழில் கூறினால், ஒன்றரை "கலோரி' மட்டுமே செலவாகிறது. எனவே, தமிழ் என்பது இதயத்தில் இருந்து வருகிறது.

பிரித்து பேச வேண்டும்: எனவே, படித்தவர்கள் மத்தியில் கலைச் சொல்லாக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இல்லாத தமிழ் வார்த்தையா? பேசும்போது, பிரித்துப் பேசுவதை பிரித்துப் பேச வேண்டும். சேர்த்துப் பேச வேண்டியதை சேர்த்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால் பொருள் மாறிவிடும். எனவே, அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியை முறையாக, சரியாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு சேகர் பேசினார்.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், "கலைச் சொல்லாக்கம் என்பது, மற்ற மொழிகளில் உள்ள சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டும் என்பது தான். தமிழில் இல்லாத சொற்களே இல்லை. எனவே, பிறமொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருத்தரங்கம் மூலம் சிறந்த கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்' என்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் செல்லகுமார் வரவேற்று பேசினார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜன் பிள்ளை துவக்கவுரை நிகழ்த்தினார். கருத்தரங்கம், மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

நன்றி:மேற்கண்ட செய்தி தினமலரில் வெளியாகி-தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வளைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.tiaskk.blogspot.com



best links in tamil
More than a Blog Aggregator